நாட்டில் செயல்பட்டு வரும் ஒற்றுமை பாலர் பள்ளிகளான தஸ்கா மற்றும் தபிகா பெர்பாடுவான் ஆகியவற்றில் இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைவாக இருப்பதாக தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாலர் பள்ளிகளில் கல்வி மற்றும் உணவு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதால், இந்தியப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அதிகளவில் சேர்க்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இன்று பினாங்கு தேசிய வகை இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இப்பள்ளிகளில் தமிழ், சீன மொழிகளைக் கற்கும் வாய்ப்புடன், மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் அடிப்படைப் புலமையை வளர்த்துக் கொள்ளவும் முடியும் என்றார்.
சிறுவயதிலிருந்தே பல்வேறு இன, மத மக்களுடன் இணக்கமாகப் பழகுவதற்கும், ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை வளர்ப்பதற்கும் இப்பள்ளிகள் உதவுவதாகக் குறிப்பிட்ட யுனேஸ்வரன், பெற்றோர்கள் இந்த இலவசக் கல்வி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.








