அரச மலேசிய விமானப்படையினருடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய மூளையாகச் செயல்பட்டவரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர் கைது நடவடிக்கையின்போது தப்பியோடியதாகவும் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அந்த நபரைப் பிடிக்க போலீஸ் துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை எட்டு விமானப்படை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், 10 பொதுமக்கள் என மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 17ஆம் தேதி சுபாங் விமானப்படைத் தளத்தில் நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின்போது, 96.64 கிலோகிராம் சந்தேகத்திற்குரிய மெத்தாம்பெத்தமின் போதைப்பொருளும், 6.98 கிலோகிராம் இரசாயனப் பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தல் வலையமைப்பில் நிதியளிப்பவர்கள், திட்டமிடுபவர்கள், கடத்தல்காரர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவரின் பங்கையும் போலீஸ் துறை கண்டறிந்துள்ளதாகவும், மேலும் பல சந்தேக நபர்களைத் தேடி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.








