தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராணுவத்தினர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப் போதிய ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், அவர்கள் தொடர்ந்து பணியில் நீடிக்கலாமா என்பதை உள்நாட்டு விசாரணை மூலம் முடிவு செய்யப்படும் என தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
சுபாங் விமானப்படைத் தளத்தில் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என அவர் குறிப்பிட்டார்.
இதுவரை ஆறு அதிகாரிகள், இரண்டு ராணுவப் பணியாளர்கள் என எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து விமானப்படையின் செயல்பாட்டு நடைமுறைகளை மறுஆய்வு செய்ய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








