நெகிரி செம்பிலானில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற சூழலிலும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே திட்டமிடப்பட்ட அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
இதற்காக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களைத் தாமதமின்றி நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்று பாரோய் இளைஞர் மற்றும் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற யாகின் மடானி நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, சிரம்பான் –கோலா பிலா சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட 180 மில்லியன் ரிங்கிட் நிதியுடன், மலிவு விலை வீட்டுத் திட்டத்திற்கு கூடுதலாக 12 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடும் வழங்கப்படும் என்றார்.
மேலும், சுங்கை லிங்கி, சுங்கை கெமெஞ்சே, சுங்கை ஜிமா இரண்டாம் கட்ட திட்டங்கள் மற்றும் போர்ட்டிக்சனில் உள்ள சுங்கை சிருசா ஆகிய நான்கு இடங்களில் புதிய வெள்ளத் தடுப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அரசியல் வேறுபாடுகள் காரணமாக மக்களின் நலத் திட்டங்களும் வளர்ச்சிப் பணிகளும் பாதிக்கப்படக்கூடாது என்றும் அன்வார் வலியுறுத்தினார்.








