பகாங், லிப்பிஸில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 66 வயது மூதாட்டி உயிரிழந்தார். அவருடன் பயணித்த இரண்டு பிள்ளைகளும் காயமடைந்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9.50 மணியளவில், ஜாலான் லிப்பிஸ்-மெராபோ 17 ஆவது கிலோமீட்டர் அருகே கம்போங் செலெண்டாங் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
மூதாட்டியின் 29 வயது மகள் காரை ஓட்டியுள்ளார். அவரது 31 வயது மகன் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்தார். மூவரும் கிளந்தான் மாநிலம் தும்பாட்டிலிருந்து கோலாலம்பூருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததாக லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் இஸ்மாயில் மான் தெரிவித்தார்.








