சிலாங்கூர் மாநிலத்தில், இல்லாத ஒரு நிலத்தை இருப்பதாகக் கூறி விற்பனை செய்தது தொடர்பான 1.5 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கில், விசாரணைக்கு உதவுவதற்காக, தொலைக்காட்சி நடிகை மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு உலு லங்காட்-இல் உள்ள கம்போங் சுங்கை செராய் என்ற இடத்தில், அத்தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அசஹார் அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம், 56 வயது நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் இவ்வழக்கை விசாரணை செய்ய தொடங்கினர்.
செராஸ் பகுதியில், நிலம் ஒன்றை வாங்குவது தொடர்பில், நண்பர் ஒருவரின் மூலமாக, 195 முறை பணப் பரிமாற்றம் செய்ததாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அத்தம்பதியை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யும் நீதிமன்ற ஆணையை போலீசார் இன்று காலை பெற்றதாகவும் அசஹார் தெரிவித்துள்ளார்.








