மலாக்கா, ஜனவரி.21-
சலவை இயந்திரமான வாஷிங் மெஷினைப் பழுது பார்க்கும் சேவைக்காக வெறும் 8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்ற 37 வயதுடைய தொழிற்சாலைப் பெண் ஊழியர் ஒருவர், 8,800 ரிங்கிட் பணத்தை இழந்து இணைய மோசடிக்குப் பலியாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில், மலாக்கா, புக்கிட் காட்டிலில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்துள்ளது. மாது ஒருவர் முகநூலில் வாஷிங் மெஷினைப் பழுது பார்க்கும் சேவையைத் தேடிக் கொண்டிருந்தார்.
'Dr Washy Singapore' என்ற பெயரிலான முகநூல் கணக்கைக் கண்ட அந்த மாது, அதில் இருந்த வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். சந்தேக நபர் முன்பதிவு கட்டணமாக 8 ரிங்கிட்டைச் செலுத்துமாறு ஒரு இணைய லிங்க் இணைப்பை அவருக்கு அனுப்பியுள்ளார்.
அந்த இணைப்பைக் கிளிக் செய்தவுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் வங்கி கணக்கிலிருந்து அவரது அனுமதியின்றி மூன்று முறை பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 8,800 ரிங்கிட் ஆகும்.
மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டபர் பாதிட் கூறுகையில், இச்சம்பவம் குறித்து மாலிம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும், குற்றவியல் சட்டம் 420-வது பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் சந்தேகத்திற்குரிய இணைப்புகள் மூலம் பணம் செலுத்துமாறு கோரும் விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம் என்றும், ஆன்லைன் சேவைகளைப் பெறும் போது கூடுதல் விழிப்புடன் இருக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.








