சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் வந்த ஏர்ஏசியா ஏகே 720 விமானம், தரையிறங்கும் போது கேபின் பேனல் ஒன்று தளர்ந்து கழன்ற போதிலும், விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி இரவு 10:22 மணிக்கு KLIA விமான முனையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. விமானம் தரையிறங்கும் வேளையில் உட்புற பேனலின் ஒரு பகுதி தளர்ந்து கழன்றது. உடனடியாகச் செயல்பட்ட பணியாளர்கள், அந்த பகுதியிலிருந்து பயணிகளைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விமானம் புறப்படுவதற்கு முன் வழக்கமான அனைத்துப் பாதுகாப்புப் பரிசோதனைகளும் செய்யப்பட்டதாகத் தெரிவித்த ஏர்ஏசியா மலேசியா பொது மேலாளர் டத்தோ கேப்டன் ஃபாரே மஸ்புத்ரா, பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்புக் கோரினார். தற்போது அந்தப் பேனல் சீரமைக்கப்பட்டு, விமானம் மீண்டும் பாதுகாப்புத் தரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று ஏர் ஆசியா விளக்கம் அளித்துள்ளது.








