ரெம்பாவ், ஜூலை.29-
ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, ஶ்ரீ அலாமைச் சேர்ந்த 6 வயது சிறுவன் திஷாந்த் , கேபள் கம்பிகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நைலன் டையினால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் என்று சவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
நெகிரி செம்பிலான் ரெம்பாவ் மருத்துவமனையின் சவக் கிடங்கில் அந்த சிறுவனின் உடல் மீதான சவப் பரிசோதனை இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி மாலை 4.26 மணிக்கு முடிவுற்றது. அந்தச் சோதனையில் சிறுவனின் இறப்பிற்கு, அவனது கழுத்தில் கேபள் நைலன் டையைக் கொண்டு இறுக்கப்பட்டுள்ளது.
மூச்சுத் திணறலுக்கு ஆளாகிய நிலையில் சிறுவனின் உயிர் பிரிந்துள்ளது என்று சவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஹ்மாட் ஸாஃப்பிர் முகமட் யூசோஃப் தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுவன் கொல்லப்பட்டதற்கானக் காரணங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. சிறுவனின் கொலை தொடர்பில் அவனது 36 வயது தந்தையைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தனது மகன் திஷாந்த், கடந்த ஜுலை 24 ஆம் தேதி புக்கிட் இண்டாவில் கார் நிறுத்தும் இடத்தில் காணாமல் போனதாக அந்த நபர் போலீசில் புகார் செய்து இருந்தார்.
இது குறித்து போலீசார் புலன் விசாரணை மேற்கொண்ட வேளையில் அந்தச் சிறுவன் கொலை செய்யப்பட்டு , நெகிரி செம்பிலான், ஜெம்போல், ரொம்பினில் உள்ள ஓர் இடத்தில் புதரில் புதைக்கப்பட்டது நேற்று மாலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக டத்தோ அஹ்மாட் ஸாஃப்பிர் தெரிவித்தார்.
அந்தச் சிறுவனின் தந்தை மனைவியுடன் கொண்ட கருத்து வேறுபாடு, மற்றும் விவாகரத்து முதலிய குடும்பப் பிரச்னையை எதிர்நோக்கியிருந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது கைது செய்யப்பட்டு 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்தச் சிறுவனின் தந்தை, குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக டத்தோ அஹ்மாட் ஸாஃப்பிர் மேலும் கூறினார்.








