மலேசிய திரைப்பட மற்றும் கலைத்துறை தொடர்ந்து வளர்ச்சி காண, குறிப்பாக திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அதிக சுதந்திரமும் திறந்தவெளியான சூழலும் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
கலை வெளிப்பாடுகளுக்கு சுதந்திரம் அவசியம் என்றாலும், மலேசியாவின் பண்பாடு, சிறப்புகள் மற்றும் ஒழுக்க நெறிகளைப் புறக்கணிக்கக் கூடாது என்றார்.

மலேசிய திரைப்படம் மற்றும் ஒளி-ஒலி துறையின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில், டாமன்சாரா டாமாயில் அமைந்துள்ள மெனாரா ஃபினாஸ் புதிய கட்டடத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.
பி. ராம்லியின் பெண்டேக்கார் புஜாங் லாப்போக் போன்ற மலேசியத் திரைப்படங்கள் புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது நாட்டின் பண்பாட்டு மரபும் அடையாளமும் ஆகும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

அதிகப்படியான கட்டுப்பாடுகள் திரைப்படத் துறையின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்றும், கலைத்துறையினர் அழுத்தம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகாத வகையில் திறந்த கலந்துரையாடலுக்கு அரசாங்கம் அதிக இடமளிக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
முன்னதாக இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில், திரைப்படத் துறையினருடனான நடவடிக்கைகளில் ஃபினாஸ் மேலும் வேகமாகவும், தெளிவாகவும், வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சட்டத் திருத்தங்களால் வழங்கப்பட்ட அதிகாரம் வெறுமனே பொறுப்புகளை அதிகரிப்பதற்காக அல்ல என்றும், திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும் கலைத்துறையினரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ பாஹ்மி தமதுரையில் வலியுறுத்தினார்.








