பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உள்ளூர் மற்றும் அனைத்துலகப் போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் நிலையில், அவர்கள் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிக்கும் சொந்த விளையாட்டுத் திடல் வசதி ஏற்படுத்தும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, தமது தலைமையிலான தமிழ்ப்பள்ளிகள் சிறப்புக் குழு நடவடிக்கை எடுத்து வருவதாக பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.
பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, மாநில அரசு ஆண்டுதோறும் 25 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கி வருகிறது. இதன் மூலம் பள்ளிகள் மற்றும் மாணவர்களின் பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
அதேவேளையில், சொந்த விளையாட்டுத் திடல் இல்லாத தமிழ்ப்பள்ளிகளுக்கு அந்த வசதியை ஏற்படுத்தித் தரும் முயற்சியிலும் சிறப்புக் குழு கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில், 1940ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளிக்கு, இதுவரை சொந்த விளையாட்டுத் திடல் வசதி இல்லாத குறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான நிலம் ஒன்று குத்தகைக்கு எடுக்கப்பட்டு, அதன் உரிமையாளரே சுமார் 5 லட்சம் ரிங்கிட் செலவில் விளையாட்டுத் திடலை அமைத்துக் கொடுத்துள்ளார்.
இந்தப் புதிய திடல் வசதியை பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கான் இயாவ், அதிகாரப்பூர்வமாக பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்ததாக டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.
இந்தத் திடல் வெறும் விளையாட்டுக்கான இடம் மட்டுமல்ல. நமது குழந்தைகளிடையே ஒழுக்கம், தன்னம்பிக்கை, குழு உணர்வு, தலைமைத்துவம் மற்றும் போராட்ட மனப்பான்மையை வளர்க்கும் ஒரு முக்கியமான தளமாகவும் இது விளங்கும்,” என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு நம்பிக்கை தெரிவித்தார்.








