மலேசிய ஊழல் தடுப்பு ஆணையான எஸ்பிஆர்எம்மின் 59ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்த ஆணையத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேற்று நெகிரி செம்பிலான், நீலாய் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மாலை 4.30 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெற்ற நிகழ்வில் ஹோமம், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட இறையருள் வழிபாடுகளுடன், நாடு மற்றும் மக்களின் நலன், அமைதி, ஒற்றுமை மற்றும் வளப்பபத்துக்காகப் பிரார்த்தனை செய்யப்பட்டது.

எஸ்பிஆர்எம்மின் சமூக, கலாச்சாரப் பிரிவின் ஒத்துழைப்புடன் ஆணையத்தின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் முதுநிலை இயக்குநர் டத்தோ கருணாநிதி சுப்பையா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எஸ்பிஆர்எம்மின் 80 அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் சுமார் 150 க்கும் மேற்பட்ட இந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.
2005ஆம் ஆண்டு தொடங்கிய இந்த வழிபாடு, கடந்த 21 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபரில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக டத்தோ கருணாநிதி தெரிவித்தார்.

இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் எஸ்பிஆர்எம்முக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்த முடியும் என்று கூறிய டத்தோ கருணாநிதி, ஊழலை எதிர்த்துப் போராடுவதில் எஸ்பிஆர்எம் தனித்து செயல்பட முடியாது என்றும், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
பொதுமக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடும்போது, ஊழல் தொடர்பான தகவல்கள் அல்லது புகார்கள் இருப்பின் தங்களை நேரடியாக அணுகித் தெரிவிக்க முடியும் என்றும் டத்தோ கருணாநிதி விவரித்தார்.

எஸ்பிஆர்எம் அதிகாரிகள் தங்கள் பணியைச் சிறப்பாக முன்னெடுக்க இறையருளும் அவசியம் என்பதையும் டத்தோ கருணாநிதி குறிப்பிட்டார்.
நீலாய், அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தலைவர் தமிழரசன் சுப்பிரமணியம் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாயாசான் பிரிஹாதின் எஸ்பிஆர்எம் அறவாரியம் சார்பில் அதிகாரிகளுடன் இணைந்து டத்தோ கருணாநிதி, பெர்துபுஹான் இல்மு கெமிலாங் ஆதரவற்றோர் இல்லத்திற்கு 2 ஆயிரம் ரிங்கிட் நன்கொடைக்கான மாதிரி காசோலையை வழங்கினார்.

எஸ்பிஆர்எம்மின் கல்வி சமூகவியல் பிரிவின் சமூகவியல் கலாச்சார மற்றும் அரசியல் கிளையின் பொறுப்பாளர் கேசவன் ராதாகிருஷணன் தலைமையிலான ஏற்பாட்டுக்குழுவினர், நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.








