கோலாலம்பூர், ஜனவரி.19-
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள், இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட அம்சங்களை, 'மடானி' அரசாங்கம் மிக உறுதியுடன் செயல்படுத்தும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
15-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்து மாமன்னர் ஆற்றிய உரை மிகவும் தெளிவானது மற்றும் கொள்கை ரீதியானது என்று பிரதமர் வர்ணித்தார்.
“மாமன்னரின் உத்தரவுகள் மிகத் தெளிவாக உள்ளன; அவற்றை அரசாங்கம் உறுதியுடன் அமல்படுத்தும்" என்று டத்தோ ஶ்ரீ அன்வார் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஊழலை ஒழிப்பதில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது என்றும், சட்டத்தின் பிடியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது என்றும் மாமன்னர் வலியுறுத்தியுள்ளார். லஞ்சம் வாங்குபவர்களை மட்டுமல்லாது, கொடுப்பவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்னர் உத்தரவிட்டுள்ளார்.
2026-ஆம் ஆண்டு நடப்பு ஆண்டு தொடங்கும் 13-வது மலேசியத் திட்டத்தில் மக்களின் கல்வி, வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று மாமன்னர் கேட்டுக் கொண்டார் என்று பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலம் மற்றும் தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்த, கல்வி முறையைத் தொடர்ந்து வலுப்படுத்துவது அவசியம் என்று மாமன்னர் தனது உரையில் மீண்டும் வலியுறுத்தியுறுத்தி இருப்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
மாமன்னரின் இந்த வழிகாட்டுதல்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், ஊழலற்ற நிர்வாகத்திற்கும் அடித்தளமாக அமையும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.








