ஈப்போ, செப்டம்பர்.07-
ஈப்போ, சிம்பாங் பூலாய் பகுதியில் இன்று அதிகாலையில் நடந்த சம்பவத்தில், 62 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர். அந்தப் பெண்ணின் உடல், கொலைகாரன் ஓட்டி வந்த காரில் கண்டெடுக்கப்பட்டது. தலைக்கு பிளாஸ்டிக் பை சுற்றப்பட்ட நிலையில், அவர் மூச்சுத் திணறி இறந்திருப்பதாக உடற்கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான, ஒரு காவற்படை அதிகாரியைத் துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பியோடிய நபர் இன்னும் பிடிபடவில்லை. அந்த முக்கியக் குற்றவாளியின் குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இந்த கொடூரக் கொலையில் உள்ள தொடர்பு என்ன என்பது குறித்த விசாரணையை காவற்படையினர் மேற்கொண்டுள்ளனர். முக்கிய குற்றவாளியைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக பேரா மாநில காவற்படைத் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.








