Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஜென்சன் ஹுவாங்கின் திருமணத்தை மீறிய உறவு விவகாரம் அனைத்துலக அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் ஏஐ சிப் ஏற்றுமதித் தடைகளைத் தவிர்க்க முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் நிறுவனத்தின், மலேசியத் துணை நிறுவனமான ஸ்பீட்மட்ரிக்ஸ் செண்டிரியான் பெர்ஹாட் மீது இதுவரை விசாரணை எதுவும் தொடங்கப்படவில்லை என முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜொஹாரி கானி தெரிவித்துள்ளார்.
ஸ்பீட்மட்ரிக்ஸ் செண்டிரியான் பெர்ஹாட் என்ற அந்த நிறுவனம் மலேசியச் சட்டங்களை மீறியதற்கான எந்த ஆதாரமும் தமது அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்கான வழித்தடமாக மலேசியாவைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட ஜொஹாரி கானி, எந்தவொரு நிறுவனமும் மலேசியச் சட்டங்களை மீறியது கண்டறியப்பட்டால், அந்த நிறுவனத்துக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த 2023-ஆம் ஆண்டு Nvidia நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கிளௌட் கம்பியூட்டிங் கூட்டாளராக சிங்கப்பூரின் மெகாஸ்பீட் நிறுவனம் இணைந்தது. இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய தொழிலதிபர் எலிஸ் ஹுவாங், சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படுபவர்.
இந்நிலையில், ஜென்சன் ஹுவாங்குடனான அவரது தனிப்பட்ட உறவு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, உலகளவில் கவனம் பெற்றுள்ளார்.
மேலும் எலிஸ் ஹுவாங், மெகாஸ்பீட் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருந்ததாகவும், கடந்த 2023-ஆம் ஆண்டின் இறுதியில் பதவி விலகிய பின்னரும் அந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளையில், கடந்த 2024 -ஆம் ஆண்டு ஜூன் முதல் 2026 -ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் மெகாஸ்பீட் நிறுவனம் சுமார் 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான Nvidia ஏஐ சிப்களை வாங்கியதாகவும், அவை மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள தரவு மையங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீன நிறுவனம் ஒன்றின் வேண்டுகோளின் பேரில் இந்தச் சிப்கள் மலேசியா மற்றும் இந்தோனேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தால், அது அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளை மீறிய செயலாக இருக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.








