முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் வீட்டுக் காவல் தொடர்பாக கடந்த நவம்பர் 6-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட விடுவிப்பு உத்தரவை மறுஆய்வு செய்ய, சட்டத்துறை தலைமை அலுவலகமான ஏஜிசி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி யாங் டிபெர்துவான் வழங்கிய நிபந்தனையுடன் கூடிய அரச மன்னிப்புக்கு இணங்க புதிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியுள்ளதாக ஏஜிசி தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த நவம்பர் 6-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, 50 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்தியதும் நஜிப் சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம் என்றும், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் எஞ்சிய தண்டனையை வரும் 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, அரச மன்னிப்பைச் செயல்படுத்துவது மற்றும் எஸ்ஆர்சி வழக்கின் சிறைத்தண்டனை, தனியாக நிலுவையில் உள்ள 1எம்டிபி வழக்கின் சிறைத்தண்டனை தொடங்கும் காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ள நிலையில் ஏஜிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த வாரம், 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த விடுவிப்பு உத்தரவு மற்றும் நிபந்தனையுடன் கூடிய அரச மன்னிப்பின் விளக்கங்கள், அதன் சட்டரீதியான தாக்கங்கள் குறித்து மேலும் ஆய்வு செய்து தெளிவு பெறும் வரை நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவைச் செயல்படுத்துவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏஜிசி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








