கோலாலம்பூர், ஜூலை.23-
இனம், மதம் மற்றும் எவ்விதப் பின்னணியையும் பொருட்படுத்தாமல் மக்களின் எதிர்கால நிலையைப் பாதுகாப்பதில் மடானி அரசாங்கம் தொடர்ந்து உறுதியாக உள்ளது என்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இன்று அறிவித்துள்ள உதவித் திட்டங்கள் மிகத் தெளிவானச் சான்றாகும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கூறினார்.
ரொக்கப் பணம் நிதி உதவி, பெட்ரோல் ரோன் 95 இலக்குரிய மானிய உதவிகள், வாழ்க்கைச் செலவுக் குறைப்புக்கான முன்முயற்சிகள் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட பல முக்கிய அனுகூலங்களை பிரதமர் இன்று அறிவித்துள்ளார்.
அவை இந்திய சமூகம் உட்பட எல்லா நிலைகளிலும் உள்ள மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுவதை அரசாங்கத்தின் அக்கறையைப் பிரதிபலிக்கின்றன என்று ரமணன் குறிப்பிட்டார்.
பொருத்தமான நேரத்தில் இந்த அனுகூலங்களை மக்களுக்கு அறிவித்து இருக்கும் பிரதமருக்குத் தாம் நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளதாக ரமணன் தெரிவித்தார்.
இதில் குறிப்பிட்டத்தக்க அம்சமாக 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் மைகார்ட் மூலம் ஒரு முறை வழங்கக்கூடிய சாரா 100 ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டதற்கான அறிவிப்பு மற்றும் 2025 ஆம் ஆண்டில் எஸ்டிஆர் எனப்படும் சும்பாங்கான் தூனாய் ரஹ்மா உதவித் தொகைக்கான ஒதுக்கீட்டை 15 பில்லியள் ரிங்கிட்டாக உயர்த்துவது ஆகியவை மக்களுக்கான உதவிகளை அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது என்பதற்குச் சான்றாகும் என்று துணை அமைச்சர் ரமணன் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.








