சிரம்பான், தாமான் துவாங்கு ஜப்பாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா தற்பொழுது ஆன்மீக எழுச்சியுடன் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
கடந்த ஜுன் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த வருடாந்திர மகோற்சவ விழாவையொட்டி, ஆலயத்தில் தினசரி சிறப்பு பூஜைகளும் ஆன்மீக நிகழ்வுகளும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நேற்று ஜூலை 1 ஆம் தேதி புதன்கிழமை ஆலயத்தில் புஷ்பாஞ்சலி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களின் பக்தி கோஷ முழக்கத்துடன், மஹா அபிஷேகம், கொடிமர அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, வண்ணமயமான நறுமண மலர்களால் இறைவனைத் தொழுதேத்தும் கண்கொள்ளா புஷ்பாஞ்சலி வைபவம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
இவ்விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக, திருவண்ணாமலையாருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்த தெய்வீக நடனமான 'கோபக் கோடாடி' ஊடல் நடனம் எனும் 'திருவூடல் அண்ணாமலையார் நடனம்' பக்தர்களைப் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. அண்ணாமலையாரின் பல்லக்கை பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து, அவரின் கோபத்தையும் வேகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் அதிவேகமாக ஆட்டி அசைத்து ஆடிய நடனம், அங்கு கூடிவிருந்த மெய்யன்பர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
இவ்விழாவின் உச்சக்கட்ட முக்கிய நிகழ்வாக, நாளை மறுநாள் ஜூலை 4 ஆம் தேதி சனிக்கிழமை, பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தும் பிரம்மாண்ட பால்குடத் திருவிழாவும், அதனைத் தொடர்ந்து எம்பெருமான் வீதியுலா வரும் கண்கொள்ளாக் காட்சியான சப்த இரத ஊர்வலமும் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளன.
தமிழகத்தின் ஸ்ரீமத் சிவாகர தேசிக சுவாமிகள் அவர்களின் தூய ஆலோசனையின்படி நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மஹோற்சவத் திருவிழாவில், மெய்யன்பர்கள் அனைவரும் தங்களின் குடும்ப சகிதமாகத் திரளாகக் கலந்துகொண்டு, எம்பெருமானின் பேரருளையும் மஹா இராஜராஜேஸ்வரரின் திருவருளையும் பெற்றுச் செல்லுமாறு தேவஸ்தானத்தின் சார்பாக திருக்கோயிலின் தலைமை குருக்கள் சிவஸ்ரீ அ. புவிதர்ஷன் குருக்கள் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார்.
மலேசியத் திருநாட்டின் ஆன்மீக வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் இத்திருத்தலத்தின் வெள்ளி விழா மஹோற்சவம், பக்தர்களின் வாழ்விற்கு வளம் சேர்க்கும் ஒரு உன்னத ஆன்மீகத் திருவிழாவாகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

















