நாடெங்கிலும் கடந்த நவம்பர் 18 முதல் 20-ஆம் தேதி வரை 34 தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 519 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இச்சோதனையில், 1,702 பேர் சோதனையிடப்பட்டனர்.
அவர்களில் கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 56 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், வங்காளதேசம், மியன்மார், இந்தோனேசியா, இந்தியா, சீனா மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாகவும் குடிநுழைவுத்துறை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதில், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி கிள்ளான், மேரு பகுதியில் உள்ள நகத் தயாரிப்புத் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 131 பேர் சோதனையிடப்பட்டு, அவர்களில் 71 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் தொழிலாளர் துறை, தேசியப் பதிவிலாகா, மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் உள்ளூர் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








