ஷா ஆலாம், ஆகஸ்ட்.23-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் சிறைக்குச் சென்று இன்று ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் சரியாக 3 ஆண்டுகள் நிறைவடைகிறது.
72 வயதான நஜீப், இன்றைய தேதியுடன் 1,096 நாட்கள் சிறையில் இருந்து வருகிறார். எஸ்ஆர்சி லஞ்ச ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அந்த தண்டனை 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, தற்போது வீட்டுக் காவலில் வைப்பதற்கு நஜீப் சட்டப் பேராட்டத்தை நடத்த வருகிறார்.
தம்மை வீட்டுக் காவலில் வைப்பதற்கு முன்னாள் மாமன்னர் சுல்தான் அப்துல்லா ஓர் கூடுதல் அரசாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று கூறி சட்டப் போராட்டம் நடத்தி வரும் நஜீப், வழக்கில் வெற்றிப் பெறுவாரோயானால் அவர் வரும் நவம்பர் மாதம் வீட்டுக் காவலில் வைக்கப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் ஆருடம் கூறியுள்ளனர்.
தாம் நடத்தும் இந்தச் சட்டப் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு மக்கள் பிரார்த்திக்குமாறு தமது ஆதரவாளர்களால் நடத்தப்படும் நஜீப் முகநூலில் அந்த முன்னாள் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது காஜாங் சிறைச் சாலையில் தண்டனை அனுபவித்து வரும் நஜீப், தமது நேரத்தைச் சட்டம் படிப்பதிலும், நூல் எழுதுவதிலும் செலவிட்டு வருவதாக அறியப்படுகிறது.








