கோலாலம்பூர், டிசம்பர்.04-
பள்ளிகளைப் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கத்துடன், பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ, நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றியதன் மூலம் மலேசியா வரலாறு படைத்துள்ளது.
அமைச்சரவையில் நேற்று பெரும்பான்மையான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்ட மசோதாவானது, கல்வி நிறுவனங்களில் பகடி வதை தொடர்பான புகார்களைத் தீர்ப்பதற்கும், அதனை நிர்வகிப்பதற்கும் சட்டப்பூர்வ வழிமுறைகளை வழங்குகிறது.
அதே வேளையில், பகடி வதைச் சம்பவங்களுக்கான புகார்களை விசாரித்து தீர்ப்பு வழங்கும் சிவில் அதிகாரத்தைக் கொண்ட பகடி வதைக்கு எதிரான தீர்ப்பாயம் ஒன்றை நிறுவவும் இது வழிவகை செய்கிறது.
சட்டச் சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட், நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்புகளுக்காக தாக்கல் செய்த இந்த மசோதாவானது, அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 27 நாடாளுமன்ற உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டது.
அதன் பின்னர், பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இந்தச் சட்ட மசோதாவானது நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே, 18 வயதுக்குட்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட பகடி வதைச் சம்பவங்களைக் கையாள்வதில் இந்த மசோதாவானது ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்று அஸாலினா குறிப்பிட்டார்.
மேலும், இவ்வாண்டு இம்மசோதாவின் செயல்திறனை மதிப்பிட்ட பிறகு, அடுத்த ஆண்டு 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்குப் பொருந்தக்கூடிய வகையில் இதன் தன்மைகளை ஆராய்வோம் என்றும் அஸாலினா தெரிவித்தார்.








