கோலாலம்பூர், டிசம்பர்.04-
13 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவும், 18 வயதிற்குட்பட்ட இளம் தலைமுறையினருக்கு உள்ளடக்கக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கவும் மலேசியா தயாராகி வருகின்றது.
இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025-ன் கீழ் வரைவு செய்யப்படும் 10 துணைச் சட்டங்களின் ஒரு பகுதியாக இதனைச் செயல்படுத்த உள்ளது.
இந்தத் துணைச் சட்டங்களின் படி, சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்களை 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அணுக முடியாத வகையில் அதில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
அதே வேளையில், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உள்ளடக்கம் அவர்களின் வயதுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025-ஆனது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தவும், உரிமம் பெற்ற செயலி, உள்ளடக்கம் மற்றும் நெட்வொர்க் சேவை வழங்குநர்களின் கடமைகளை வரையறுக்கவும் உருவாக்கப்பட்டதாகும்.
கடந்த மே மாதம் 22 -ஆம் தேதி வரையறுக்கப்பட்ட இந்த இணையப் பாதுகாப்பு சட்டம், வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.








