Dec 4, 2025
Thisaigal NewsYouTube
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு
தற்போதைய செய்திகள்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.04-

கடந்த மாதம், மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய ஆடவர்கள், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரணை செய்ய புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுப் பிரிவு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

இச்சம்பவம் குறித்து கடந்த நவம்பர் 24-ஆம் தேதி, மலாக்கா குற்றப்புலனாய்வுப் பிரிவால், குற்றவியல் சட்டம் பிரிவு 307-இன் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து அதிருப்தியடைந்த, அந்த மூன்று ஆடவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி, போலீசில் புகார் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதிச் செய்வதற்காக, புக்கிட் அமான் தலைமையகத்தில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 24 ஆம் தேதி, டுரியான் துங்காலில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 21 வயது எம். புஷ்பநாதன், 24 வயது T. புவனேஸ்வரன் மற்றும் 29 வயது ஜி. லோகேஸ்வரன் ஆகியோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கொள்ளையர்களைப் போல் காணப்பட்ட அந்த மூவரையும் கைது செய்வதற்கு போலீசார் முயற்சி செய்த போது, அவர்கள் பாராங்கினால் தாக்கியதில் போலீஸ்காரர் ஒருவர் காயம் அடைந்ததாகவும், தற்காப்பு நடவடிக்கைக்காக போலீஸ்காரர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் போலீஸ் தரப்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால், பிரேத சோதனையில் தோட்டாக்கள் அனைத்தும் உடலில் மேலிருந்து கீழாக பாய்ந்துள்ளதால், இது நீதித்துறைக்கு புறம்பான மரணத் தண்டனை பாணியிலான கொலையாகும் என வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News