கோலாலம்பூர், டிசம்பர்.04-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் ஷாம்சுல் இஸ்கண்டார் மற்றும் வர்த்தகர் ஆல்பெர்ட் தே ஆகிய இருவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று, நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ், குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி முதல் 2024-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி வரையில், நான்கு தனித்தனி சந்தர்ப்பங்களில், ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தேவிடமிருந்து 1 லட்சத்து 40,000 ரொக்கம் மற்றும் 36 ஆயிரத்து 829 ரிங்கிட் மதிப்புள்ள தளவாட மற்றும் மின்சாதனப் பொருட்களைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
சபாவில் ஆல்பெர்ட் தேவிற்கு நெருக்கமான நிறுவனங்களுக்குக் கனிம ஆய்வு உரிமங்களுக்கான ஒப்புதலைப் பெற்றுத் தர ஷாம்சுல் இஸ்கண்டார், இந்த லஞ்ச ஊழலைப் புரிந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009, பிரிவு 17(a) இன் கீழ் ஷாம்சுலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அதே வேளையில், ஆல்பெர்ட் தே மீது அதே சட்டப் பிரிவு 17(b) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
செஷன்ஸ் நீதிமன்றத்தில், நீதிபதி சுஸானா ஹுசேன் முன்னிலையில், குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்ட பின்னர், 49 வயதான ஷாம்சுல் மற்றும் 37 வயதான ஆல்பெர்ட் தே ஆகியோர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர்.
இதனையடுத்து, இவ்வழக்கை வரும் ஜனவரி 8 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்குக் கொண்டு வர நீதிபதி சுஸானா ஹுசேன் உத்தரவிட்டார்.








