குளுவாங், டிசம்பர்.04-
நேற்று போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய கைதி ஒருவர், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து, நேற்று மாலை 4.30 மணியளவில், குளுவாங், ஜாலான் மெர்சிங்கில் உள்ள சிறைத்துறை மறுவாழ்வு மையத்தில் இருந்து, தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.
இதனையடுத்து, குளுவாங் போலீஸ் மற்றும் சிறைத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அந்த 26 வயதான கைதியைத் தேடும் பணியைத் துவங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மாலை 5.30 மணியளவில், கம்போங் ஶ்ரீ தீமோர் அருகேயுள்ள, கோழிப் பண்ணை அருகே பதுங்கியிருந்த அக்கைதியைச் சுற்றி வளைத்த போலீசார் அவரை மீண்டும் கைது செய்தனர்.
இவ்வழக்கானது, குற்றவியல் சட்டம் பிரிவு 233-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகின்றது.








