சுங்கை பட்டாணி, செப்டம்பர்.23-
கெடா, சுங்கை பட்டாணியில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளியின் கழிப்பறையில் ஓர் இந்திய மாணவியைக் கை, கால்களைக் கட்டி, கழிப்பறையிலேயே கைவிட்டு வந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரு இந்திய மாணவிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை அகற்றுக் கோரி, சட்டத்துறை அலுவலகத்தில் பிரதிநிதித்துவ மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
அந்த இரு இந்திய மாணவிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று சுங்கை பட்டாணி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முகமட் அஸ்லான் பஸ்ரி முன்னிலையில் தொடங்கிய போது, அந்த இரு மாணவிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என். நாகரத்னம், நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
13 வயதுடைய அந்த இரு மாணவிகளும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய போதிலும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை அகற்றக் கோரி விண்ணபிக்கப்பட்டதாக நாகரத்னம் குறிப்பிட்டார்.
கடந்த ஜுலை 14 ஆம் தேதி மாலை 6.40 மணியளவில் பள்ளி முடிவடைந்த நிலையில், தனது 13 வயது மகள் வீடு திரும்பாததைக் கண்டு சந்தேகித்த அந்த மாணவியின் தாயார், ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் அனைத்து வகுப்பறைகளிலும் தேடியுள்ளார்.
இறுதியாக பள்ளியின் பெண்கள் கழிப்றையில் சோதனையிட்ட போது, மாணவர்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் தனியொரு நபராக அந்த மாணவி கைகால்கள் கட்டப்பட்டுக் கிடந்தார். சுயநினைவு இழந்தவரைப் போல் தனது மகள் தரையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான அந்த மாணவியின் தாயார் பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்தார்.








