புத்ராஜெயா, டிசம்பர்.03-
லஞ்ச ஊழல் தொடர்பில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் ஷாம்சுல் இஸ்கண்டார் மற்றும் வர்த்தகர் ஆல்பெர்ட் தே ஆகியோர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
இருவரும் முறையே நாளை வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் மற்றும் ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர் என்று அஸாம் பாக்கி விளக்கிானர்.
இருவருக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்படவிருக்கிறது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
குத்தகை லைசென்ஸ் தொடர்பில் சபா சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தாம் கொடுத்த லஞ்சப் பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கு பிரதமரின் முன்னாள் செயலாளர் ஷாம்சுலுக்குத் தாம் 6 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகக் கொடுத்ததாக ஆல்பெர்ட் தே பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியைத் தொடர்ந்து இருவரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்து தற்போது தடுப்புக் காவலில் வைத்துள்ளது.








