Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்
தற்போதைய செய்திகள்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

Share:

மலாக்கா, டிசம்பர்.03-

கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று ஆடவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த மூன்று ஆடவர்களும் பாதுகாப்புப் படையினரைத் தாக்குவதற்கு வன்முறையுடன் செயல்பட்டனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டை அந்த 3 ஆடவர்களின் குடும்பத்தினர் இன்று மறுத்துள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று ஆடவர்களில் ஒருவரின் மனைவியான ஜெயஸ்ரீ என்று மட்டுமே அடையாளம் கூறிக் கொண்ட ஓர் இந்தியப் பெண், சம்பவம் நிகழ்ந்த அன்று கடைசி நிமிடத்தில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதற்கான கைப்பேசி ஆடியோ பதிவை இன்று வெளியிட்டுள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்ட 29 வயது ஜி. லோகேஸ்வரன் என்பவரின் மனைவியான ஜெயஸ்ரீ, தனது கணவரையும், இதர இரண்டு பேரையும் போலீசார் கைது செய்த போது, அவர்கள் போலீசாருக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கியதாக ஜெயஸ்ரீ குறிப்பிட்டார்.

தனது கணவர் பிடிப்படுவதற்கு சில வினாடிகளுக்கு முன்புதான், அவருடன் தாம் கைப்பேசியில் உரையாடிக் கொண்டு இருந்ததாகவும், போலீசாரிடம் தனது கணவர் பிடிபட்டப் பின்னர் அந்த இடத்தில் என்ன நடந்தது என்பதை, செயல்பாட்டில் இருந்த கைவிடப்பட்ட கைப்பேசியின் வாயிலாகத் தம்மால் தெளிவாகக் கேட்க முடிந்ததாக ஜெயஸ்ரீ குறிப்பிட்டார்.

போலீஸ்காரர்கள் கூறியதைப் போல் தனது கணவர், போலீஸ்காரர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை அங்குள்ள சூழ்நிலை காட்டியது.

என் கணவர் போலீசாருக்கு ஒத்துழைப்பு நல்கினார். அவரை பிடித்த போலீஸ்காரர்கள் முதலில் உட்காரச் சொன்னார்கள். என் கணவர் போலீஸ்காரருக்கு பதில் அளிக்கும் விதமான உட்காருகிறேன் என்று பதில் அளித்தார். அந்த நேரத்தில்தான் பயங்கர துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டது. என் கணவரின் அலறல் சத்தம், என் காதைப் பிளந்தது என்று ஜெயஸ்ரீ இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்விவகாரத்தை அம்பலப்படுத்தினார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 21 வயது எம். புஷ்பநாதன், 24 வயது T. புவனேஸ்வரன் மற்றும் 29 வயது ஜி. லோகேஸ்வரன் ஆகியோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அந்த மூவரைப் போலீஸ்காரர்கள் பிடிக்க முற்பட்டனர். அப்போது அவர்கள் பாராங்கினால் போலீஸ்காரர்களைத் தாக்க முற்பட்டனர். போலீஸ்கார்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் துப்பாக்கி சூடு நடத்திய போது அந்த மூவரும் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பில் வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் மற்றும் ஆகம அணித் தலைவர் அருண் துரைசாமி இன்று நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் போலீஸ்காரர்களின் கூற்று, உண்மைக்கு புறம்பானது என்று லோகேஸ்வரனின் மனைவி ஜெயஸ்ரீ வாதிட்டார்.

Related News