கோலாலம்பூர், டிசம்பர்.03-
வர்ததகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை குறித்து வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் தாம் கேள்வி எழுப்பவிருப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை குறித்து இரண்டு மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஆல்பெர்ட் தேவின் மனைவி லீ பெய் ரீ ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதே வேளையில் அந்த வர்த்தகரைக் கைது செய்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் ஒரு வியாக்கியானத்தைக் கூறுகிறது.
இந்த இரண்டு மாறுபட்ட வியாக்கியானங்கள் மத்தியில் வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட போது உண்மையிலேயே என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையைத் தாம் கேட்டுக் கொள்ளப் போவதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
வர்த்தகர் ஆல்பெர்ட் தே மனைவி அளித்துள்ள போலீஸ் புகாரின்படி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பூச்சோங்கில் உள்ள தங்கள் வீட்டிற்கு நுழைந்த ஜேக்கேட் மற்றும் முகமூடி அணிந்த எஸ்பிஆர்எம் அதிகாரிகள், தமது கணவரைத் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார் என்று கோபிந்த் சிங் தெரிவித்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த எஸ்பிஆர்எம் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தும்படி போலீசில் ஒரு புகார் செய்துள்ளது. இந்த இரண்டு மாறுபட்ட கருத்துகளுக்கு மத்தியில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்துவது அவசியமாகும் என்று கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.
இவ்விவகாரத்திற்கு விரைந்து தீர்வு காண வேண்டுமானால் சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவான உள்ளடக்கத்தை ஆராய்வது மிக முக்கியமாகும்.
உண்மை நிலவரத்தைக் கண்டறிய அந்த வீடியோ பதிவை வழக்கறிஞரிடமோ அல்லது போலீசாரிடமோ ஒப்படைக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்யப்படுமானால் அந்த கோரிக்கை நியாயமானது மற்றும் ஏற்புடையதே என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.








