கோலாலம்பூர், டிசம்பர்.03-
தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சு, உள்ளூர் தொழில்முனைவோருக்கும் பல்வேறு வகையான நிதி மற்றும் பயிற்சி வழங்குவதுடன் தேசிய பிரான்சைஸ் தொழில் காப்புரிமைக் கொள்கை 2030 ஐ செயல்படுத்துவதன் மூலம் உள்ளூர் தொழில்துறையினர் மற்றும் அனைத்துலக பிராண்டுகளுக்கு இடையே தேசிய பிரான்சைஸ் சுழலமைப்பு, சமநிலையில் இருப்பதை உறுதிச் செய்வதில் உறுதியாக இருக்கிறது என்று அதன் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
மலேசிய பிரான்சைஸ் எக்ஸ்பிரஸ் முறையின் கீழ் உணவு மற்றும் பானத் துறையில் இதுவரை 86 வெளிநாட்டு பிரான்சைஸ் உரிமையாளர்கள் தங்களைப் பதிவுச் செய்துக் கொண்டுள்ளனர். இருப்பினும் உள்ளூர் பிரான்சைஸ் உரிமையாளர்கள், சந்தையில் இன்னமும் 52.1 விழுக்காட்டினர் ஆதிக்கம் செலுத்துவதாகவும் டத்தோ ஶ்ரீ ரமணன் குறப்பிட்டார்.
உள்ளூர் சந்தையில் வெளிநாட்டு பிரான்சைஸ் உரிமையாளர்களின் பங்கேற்பானது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயனளிக்கும் என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
இதில் முதலீடு மற்றும் விநியோகச் சங்கிலி நடவடிக்கைகள் அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறையினருக்கு அறிவு சார்ந்த தொழில்நுட்பப் பரிமாற்றத்தை உருவாக்கவும் வகை செய்கிறது என்று நாடாளுமன்ற மேலவையில் இன்று கேள்வி நேரத்தின் போது டத்தோ ஶ்ரீ ரமணன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.








