கடந்த ஜூலை 15 ஆம் தேதி புத்ராஜெயாவில், மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் மித்ரா அமைப்பின் ஏற்பாட்டில், இந்திய சமூக மேம்பாட்டிற்கான 'செலிக் மடானி 2026' திட்டத்தின் கீழ் பாலர் பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கும் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சார்பில், மனிதவள அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் சுடெக்னோ அகமட் பெலோன் மற்றும் மித்ராவின் தலைமை இயக்குநர் கே. ரவீந்தரன் நாயர் ஆகியோர் கலந்து கொண்டு, செலிக் மடானி 2026 தொடர் 2-ன் கீழ் தென் மண்டலம் தவிர்த்த பிற மாநிலங்களைச் சேர்ந்த 117 பாலர் பள்ளி நடத்துநர்களுக்கு நிதி உதவிக்கான அங்கீகாரக் கடிதங்கள் மற்றும் மாதிரி காசோலைகளை வழங்கினர்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 162 பாலர் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, பி40 பிரிவைச் சேர்ந்த 3,612 இந்தியச் சிறுவர்களின் ஆரம்பக் கல்விக்காக மொத்தம் 8.87 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.



"இந்த அரசாங்கத்தின் கல்வி நிதியுதவி, தங்களின் பாலர் பள்ளி மேம்பாட்டிற்கும் மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் எவ்வளவு பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது என்பது குறித்து, இந்த நிகழ்வில் பயனடைந்த 6 முக்கியப் பாலர் பள்ளிகளின் பொறுப்பாளர்கள் தங்களது நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்."
மடானி அரசாங்கத்திற்கும், அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணணுக்கும், மித்ராவிற்கும் பாலர் பள்ளி நடத்துநர்கள் வெளிப்படுத்திய இந்த நன்றியும் மகிழ்ச்சியும், மித்ரா அமைப்பின் மூலமாக நமது இந்தியச் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்குச் சென்றடையும் ஒவ்வொரு நிதியும் எவ்வளவு வெளிப்படையாகவும், பயனுள்ளதாகவும் மாறுகிறது என்பதற்கு மிகச்சிறந்த சான்றாகும்.











