Jul 18, 2026
Thisaigal NewsYouTube
கோழிப் பண்ணையில் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை – 34 சட்டவிரோத வெளிநாட்டினர் கைது
தற்போதைய செய்திகள்

கோழிப் பண்ணையில் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை – 34 சட்டவிரோத வெளிநாட்டினர் கைது

Share:

மலேசிய குடிநுழைவுத் துறை கெடா ஜித்ராவில் அமைந்துள்ள ஒரு கோழிப் பண்ணையில் நேற்று நள்ளிரவு மேற்கொண்ட ஒருங்கிணைந்த 'ஒப்ஸ் பெர்செபாடு' மற்றும் 'ஒப்ஸ் சாப்பு' நடவடிக்கையில், 34 சட்டவிரோத வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டிருப்பத்தனர்.

இந்த நடவடிக்கை ஜூலை 17 ஆம் தேதி இரவு 11.00 மணி முதல் ஜூலை 18 ஆம் தேதி அதிகாலை வரை முன்னெடுக்கப்பட்டது. இதில் பல்வேறு அமலாக்க அமைப்புகளைச் சேர்ந்த மொத்தம் 58 அதிகாரிகள் பங்கேற்றனர்.

அவர்களில் கெடா மாநில குடிநுழைவுத் துறையைச் சேர்ந்த 35 அதிகாரிகள், பெர்லிஸ் குடிவரவுத் துறையைச் சேர்ந்த 12 அதிகாரிகள், தொழிலாளர் துறையைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் மற்றும் தேசியப் பதிவுத் துறையைச் (JPN) சேர்ந்த ஆறு அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நடவடிக்கையின்போது இரண்டு வளாகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், 41 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.

மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவில், 19 முதல் 52 வயதுக்குட்பட்ட 34 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 31 ஆண்களும், மூன்று பெண்களும் அடங்குவர்.

கைது செய்யப்பட்டவர்களில் 23 பேர் மியான்மர் நாட்டவர்கள் (20 ஆண்கள், 3 பெண்கள்), 8 பேர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 3 பேர் இந்தோனேசியர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் குடிவரவு சட்டம் 1959/63 (சட்டம் 155)-இன் கீழ் பல்வேறு குற்றங்களை புரிந்ததாக நம்பப்படுகிறது. குறிப்பாக, பிரிவு 6(1)(c)-ன் கீழ் செல்லுபடியாகும் அனுமதிச் சீட்டு அல்லது அனுமதிப்பத்திரம் இன்றி மலேசியாவிற்குள் நுழைந்தது அல்லது தங்கியிருந்தது மற்றும் பிரிவு 15(1)(c)-ன் கீழ் அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கியிருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதே நடவடிக்கையின் போது, மேலதிக விசாரணைக்கு உதவுவதற்காக Imm.29 (சாட்சி ஆஜராகுமாறு அறிவிக்கும் படிவம்) ஒன்றும் வழங்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைத்து சட்டவிரோத வெளிநாட்டினரும் ஆவணப்படுத்தல் மற்றும் மேலதிக விசாரணைக்காக சிக், பெலாந்திக் குடிவரவு தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணை நிறைவடைந்த பின்னர், நடைமுறையில் உள்ள குடிவரவு சட்டங்களின் கீழ் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கெடா மாநில மலேசிய குடிவரவுத் துறை, மாநிலம் முழுவதும் சட்டவிரோத வெளிநாட்டினரின் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில் அமலாக்க நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்துவதுடன், குடிவரவு சட்டம் 1959/63 மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Related News