புத்ராஜெயா, ஜனவரி.20-
நாட்டில் உள்ள பொது உயர்க்கல்விக்கழகங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இன்று முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இலவசக் கல்வி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
தேசிய கல்வித் திட்டம் 2026 முதல் 2035-ஐ இன்று தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர், கல்வி முறையில் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த வரலாற்றுச் சிறப்பு மிகக் முடிவைத் தாம் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த இலவசக் கல்விச் சலுகை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. நாட்டின் அனைத்து பொதுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு சார்ந்த உயர்கல்விக் கழகங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இது பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
"கல்வி என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. குறிப்பாக, சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எவ்வித நிதிச் சுமையுமின்றி தங்களது உயர்க்கல்வியைத் தொடர வேண்டும் என்பதே தமது இலக்கு," என்று பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.








