கோலாலம்பூர், அக்டோபர்.14-
பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் இன்று காலையில் மாணவன் ஒருவன் நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் நான்காம் படிவ மாணவி ஒருவர் பரிதாபமாக மாண்டார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் பெண்கள் கழிப்பறை அருகில் நிகழ்ந்தது. இந்த தாக்குதலை இரண்டாம் படிவ மாணவன் ஒருவன் நடத்தியுள்ளான். அவன் யாருக்கும் தெரியாமல், புத்தகப் பையில் கத்தியைக் கொண்டு வந்துள்ளான் என்று நம்பப்படுகிறது.
கடுமையான கத்திக் குத்துக் காயங்களுக்கு ஆளான 16 வயது மாணவி, கழிப்பறை அருகிலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நான்காம் படிவ மாணவியைக் கத்தியால் குத்திய பின்னர் மேலும் சில மாணவர்களைக் கத்தியால் தாக்குவதற்கு அந்த மாணவன் முனைந்துள்ளதாக தொடக்கத் தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருகின்றனர்.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷம்சுடின் மாமாட், தடயவியல் போலீசார் மற்றும் புலன் விசாரணை அதிகாரிகள், பள்ளி வளாகத்தில் விசாரணை செய்து வருவதைக் காண முடிந்தது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிலாங்கூர் மாநில போலீசார் ஓர் அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








