பெட்டாலிங், ஜாலான் பூச்சோங், 6 ஆவது மையில் உள்ள சுத்த சமாஜத்தின் தலைவர் அன்னை மங்களம் காலமானார். அவருக்கு வயது 97. மூப்பின் காரணமாக அவரின் உயிர் இன்று பிற்பகல் 3.52 மணியளவில் பிரிந்தது.
ஏ. மங்களம் என்ற இயற்பெயர் கொண்ட அன்னை மங்களம் மலேசியாவின் அன்னை திரேசா என்று புகழப்பட்டவர். ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளையும், அபலைப் பெண்களையும் பராமரித்து, அவர்களுக்கு கல்வியூட்டி, வாழ்க்கையில் உன்னத நிலைக்கு உயர்த்திய பெருமை அன்னை மங்களத்தையே சேரும்.
கடந்த 1926 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தவரான அன்னை மங்களம், கோலாலம்பூருக்கு வந்த பின்னர் 1948 ஆம் ஆண்டு ஆசிரியர் தொழிலில் தன்னை ,அர்ப்பணித்துக்கொண்டார். 1961 ஆம் ஆண்டு ஜாலான் பூச்சோங்கில் சுவாமி சத்யானந்தா நிறுவிய சுத்த சமாஜத்தில் இளம் வயதிலேயே ஒரு சீடராக தம்மை பிணைத்துக்கெண்டு சமூக மற்றும் கல்விப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
ஜாலான் பூச்சோங், தர்மா தேசிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியராகவும் அன்னை மங்களம் பணியாற்றியுள்ளார். சுத்த சமாஜத்துடன் சுமார் 74 ஆண்டு காலம் சேவையாற்றி வந்த அன்னை மங்களம் உடல் நலம் குன்றிய நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு, பெட்டாலிங் ஜெயா, அசுந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அன்னை மங்களத்தின் முன்னாள் மாணவரும், சுத்த சமாஜத்தின் முன்னாள் செயலாளருமான ரவீந்திரன் ராமன் குட்டி தெரிவித்தார்.
அன்னை மங்களத்தின் நல்லடக்கச் சடங்கு, வரும் திங்கட்கிழமை நடைபெறும். சுத்த சமாஜத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னை மங்களத்தின் நல்லுடலுக்கு பொது மக்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இறுதி மரியாதை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


