சுங்கை பட்டாணி, ஜனவரி.20-
இம்மாதம் கெடா, சுங்கை பட்டாணியில் ஆயுதங்களுடன் நடைபெற்ற இரண்டு தனித்தனி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, 17 வயது பையன் மற்றும் ஒரு பெண் உட்பட 14 பேர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த ஜனவரி 9-ஆம் தேதி மாலை 4 மணியளவில் பாடாங் தாமான் சுத்தேரா என்ற இடத்தில் கற்கள் மற்றும் தடிகளுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக 17 வயது சிறுவன் மற்றும் 7 பேர் மீது மாஜிஸ்திரேட் முகமட் அஸ்லான் பஸ்ரி முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
48 வயது கே. சண்முகம், 19 வயது ஆர். குமாரவேலு, 19 வயது எஸ். அன்புச்செல்வம், 21 வயது எம். சிவக்குமார், 20 வயது எஸ். முனீஸ்வரன், 24 வயது எஸ். தெய்வம் மற்றும் 25 வயது எஸ். தேவகி ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர். இவர்களுக்கு தலா 3,000 ரிங்கிட் பிணை அனுமதிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 10-ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் தாமான் சொங்கேட் பகுதியில், தலைக்கவசம், பாராங் கத்தி மற்றும் கார் ஆகியவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டதாக மேலும் 6 பேர் மீது மற்றொரு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தத் தாக்குதலில் தேவகி மற்றும் தெய்வம் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
27 வயது வி. ரிஷிதரன், 27 வயது ஆர். ஹரிஹரன், 28 வயது ஏ. தினேஷ்குமார், 27 வயது மதியழகன், 33 வயது எஸ். வாவீந்திரன் மற்றும் 21 வயது கே. கௌதம் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
மாஜிஸ்திரேட் முகமட் சைஃபுல் அக்மல் முன்னிலையில் இந்த ஆறு பேரும் குற்றச்சாட்டை மறுத்தனர். இவர்களுக்கு தலா 2,500 ரிங்கிட் பிணை அனுமதிக்கப்பட்டது.
இந்த இரண்டு வழக்குகளும் மேல் விசாரணைக்காக வரும் பிப்ரவரி 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்காப்பு தரப்பு வழக்கறிஞர்களாக எஸ். விக்னேஸ்வரன் மற்றும் எஸ். அரவிந்த் ஆஜராகினர்.








