ஷா ஆலாம், ஜனவரி.20-
மலேசியாவில் 5G வலைப்பின்னல் சேவையை வழங்குவதில் சிலாங்கூர் மாநிலம் முன்னிலை வகிப்பதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி, சிலாங்கூர் 96.9 சதவீத 5G சேவைப் பரவலைப் பதிவு செய்துள்ளது. இந்தச் சாதனை 'மலேசியா மடானி' கொள்கையின் ஒரு பகுதியான நல்வாழ்வு, நிலைத்தன்மை மற்றும் கூட்டு முன்னேற்றத்தை வலுப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் சுமார் 7.4 மில்லியன் மக்கள் என்ற அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான சிலாங்கூரில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதிச் செய்ய மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
2025 ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூரை ஒரு 'ஸ்மார்ட் சிட்டி'யாகவும் (Smart City), டிஜிட்டல் பொருளாதாரத்தின் மையமாகவும் மாற்றுவதற்கான திட்டத்திற்கு இந்த 5G சேவை பெரும் பக்கபலமாக அமையும்.
இந்த உயர் ரக 5G சேவை வெறும் எண்கள் மட்டுமல்ல, இது பொதுச் சேவையின் திறனை அதிகரிக்கவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகரத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் உதவும் என்று அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் மேலும் தெரிவித்தார்.








