கெமாமான், ஜனவரி.20-
திரெங்கானு, கெமாமான், ஃபெல்டா நெராம் 1 பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ரம்புத்தான் பழத்தைச் சாப்பிட்ட 5 வயது சிறுவன் ஒருவன் அதன் கொட்டைத் தொண்டையில் சிக்கி நேற்று திங்கட்கிழமை பரிதாபமாக உயிரிழந்தான்.
நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில், அந்தச் சிறுவன் தனது 6 வயது மூத்த சகோதரியுடன் சேர்ந்து ரம்புத்தான் பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனது சகோதரி பழத்தின் தோலை உரித்துக் கொடுக்க, இருவரும் அதனைச் சாப்பிட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பழத்தின் கொட்டை சிறுவனின் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
சிறுவன் பேச முடியாமல் தவிப்பதைக் கண்ட குடும்பத்தினர், அவனை உடனடியாக கெமாமான் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அன்று பிற்பகல் 2.50 மணியளவில் அவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இது குறித்து கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிடெண்டண்ட் முகமட் ராசி ரோஸ்லி கூறுகையில், "பிரேதப் பரிசோதனையில் சிறுவனின் மரணத்திற்கு மூச்சுத் திணறல் தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. அவனது தொண்டையில் ரம்புத்தான் பழத்தின் கொட்டை இருந்ததை மருத்துவர்கள் உறுதிச் செய்துள்ளனர் என்று முகமட் ராசி தெரிவித்தார்.








