மலாக்கா, ஜனவரி.20-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 'டத்தோ ஸ்ரீ' விருது பெற்றுத் தருவதாகக் கூறி, 36,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான லஞ்சப் பணத்தைப் பெற்றதோடு, அது தொடர்பான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னாள் செய்தியாளர் ஒருவர் மறுத்துள்ளார்.
44 வயதான நூர்ஃபாதேஹா ஒத்மான் என்ற அந்தப் பெண்மணி, தற்போது மலாக்கா அரசு மருத்துவமனையின் மனநலப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று, மலாக்கா ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Elesabet Paya Wan முன்னிலையில் மருத்துவமனை வார்டிலேயே இந்த விசாரணை இன்று நடைபெற்றது. தன் மீதான நான்கு குற்றச்சாட்டுகளையும் அந்த பெண் பத்திரிகையாளர் மறுத்து விசாரணை கோரினார்.
ஓர் அரசு சாரா அமைப்பின் முன்னாள் உறுப்பினரான இவர், மலாக்கா மாநில விருது வழங்கும் விழாவில் தொழிலதிபர் ஒருவருக்கு 'டத்தோ ஸ்ரீ' பட்டம் பெற்றுத் தருவதாகக் கூறி அவரிடமிருந்து பணம் பெற்றுள்ளார். ஆனால், அத்தகைய விருதை வழங்க இவருக்கு எந்த அதிகாரமும் இல்லை அரசு தரப்பு வழக்கறிஞர்களின் வாதமாகும்.
நான்கு குற்றச்சாட்டுகளையும் சேர்த்து மொத்தம் 36,824 ரிங்கிட் லஞ்சம் மற்றும் ஆவண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.








