கோலாலம்பூர், ஜனவரி.20-
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, இடுப்பு எலும்பு முறிவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை தேறி வருவது குறித்து மருத்துவக் குழுவினர் திருப்தி தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.
கடந்த 14 நாட்களாக தேசிய இருதய சிகிச்சை கழகமான IJN- னில் துன் மகாதீர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு ஏற்பட்ட இடுப்பு எலும்பு முறிவிற்காக அவர் அங்கு அனுமதிக்கப்பட்டார்.
துன் மகாதீரின் உடல்நல முன்னேற்றம் மற்றும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து நிபுணர்கள் திருப்தி கொண்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் சுஃபி யுசோஃப் தெரிவித்தார்.
இருப்பினும், அவர் முழுமையாக குணமடைவதற்கான 'பிசியோதெரபி' (Physiotherapy) மீட்புச் செயல்முறை இன்னும் நீண்ட காலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.








