பாச்சோக், பிப்ரவரி.18-
கிளந்தான், பந்தாய் கண்டிஸில் நேற்று காணாமல் போன இருவரில் ஒருவரது உடல், இன்று மதியம் சம்பவ இடத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் கரை ஒதுங்கிய நிலையில் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது.
பாச்சோக் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டண்ட் முஹமட் இஸ்மாயில் ஜமாலுடின் கூறுகையில், பினாங்கில் தீயணைப்பு வீரராகப் பணியாற்றி வந்த 32 வயதுடைய அஹ்மாட் பாட்ருல் நாயிம் என்பவரின் உடல் மதியம் 12.15 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அவரது 21 வயது தம்பி Ab Wahab Ahmad Nuruddin Ab Wahab, இன்னும் காணவில்லை. அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேடுதல் எல்லை கடற்கரையோரமாக 10 கி.மீ வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
காவல்துறை, தீயணைப்புத் துறை, பொதுத் தற்காப்புப் படை மற்றும் மலேசிய கடல்சார் அமலாக்க முகமை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று மாலை 5.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தின் போது, பாசிர் பூத்தே பகுதியைச் சேர்ந்த இந்த இரண்டு சகோதரர்களும் தங்களது குடும்ப உறுப்பினர்கள் 20 பேருடன் கடற்கரைக்குச் சுற்றுலா சென்றிருந்த போது இந்த விபத்து நேரிட்டது.








