லங்காவி, ஜூன்.28-
லங்காவி தீவிற்காக, சீ ஆம்புலன்ஸ் எனப்படும் மருத்துவ மீட்புப் படகுகள், கொள்முதல் செய்தவதற்கும், அதன் ஆரம்பக் கட்ட செயல்பாட்டுச் செலவுகளுக்கும் நிதி அமைச்சு, 5.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது.
இந்தச் சேவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் கூறுகையில், லங்காவி மக்களுக்கும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் அவசர மருத்துவச் சேவைகளை விரைவாகவும், திறமையாகவும் வழங்கும் நோக்கில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சீ ஆம்புலன்ஸ் சேவையானது, லங்காவியில் உள்ள சுல்தானா மாலிஹா மருத்துவமனையில் இயக்கப்படும் என்றும், நோயாளிகளை அங்கிருந்து மலேசியத் தீபகற்பத்தின் பிரதான நிலப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்குப் பாதுகாப்பாக மாற்றுவதே அதன் முக்கியப் பணியாக இருக்கும் என்றும் லங்காவி மேம்பாட்டு ஆணையத்தின் இணைத் தலைவருமான அமீர் ஹம்ஸா குறிப்பிட்டுள்ளார்.
தற்போது லங்காவியிலிருந்து பரிந்துரை செய்யப்பட்ட மருத்துவமனைகளில் நோயாளிகளை இடம் மாற்றம் செய்ய, பயணிகள் படகுச் சேவைகளையே பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படகுச் சேவைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நேரங்களில், குறிப்பாக அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை உடனடியாக மாற்ற வேண்டிய சூழலில் இது பெரும் சவாலாக இருப்பதாகவும் அமீர் ஹம்ஸா விளக்கமளித்துள்ளார்.








