முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், சொத்து அறிவிப்பு தொடர்பான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் சவால் செய்யவுள்ளார்.

அமலாக்கத் துறையின் சொத்து அறிவிப்பு உத்தரவின் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்குத் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், பல சட்ட அடிப்படைகளைக் கொண்டு இதற்கான மனு தாக்கல் செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் அமர் ஹம்சா அர்ஷாட் தெரிவித்தார்.

இஸ்மாயில் சப்ரி அறிவிக்கத் தவறியதாகக் கூறப்படும் சொத்துகளில் பல்வேறு நாணயங்களில் உள்ள பணம், ஐந்து தங்கக் கட்டிகள், ஒரு வெள்ளிக் கட்டி மற்றும் ஒரு தங்க நாணயம் ஆகியவை அடங்குகின்றன.
அவற்றில் ரிங்கிட் 14.77 மில்லியன், சிங்கப்பூர் டாலர் 6.1 மில்லியன், அமெரிக்க டாலர் 1.46 மில்லியன் உள்ளிட்ட பெருமளவிலான வெளிநாட்டு நாணயங்களும் அடங்கும்.
வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 4ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.








