மலாக்காவில் உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக ஒரு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அச்சிறுவனின் தாய் உட்பட நான்கு மியன்மார் நாட்டினரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 20 முதல் 50 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவர்.
இச்சம்பவம் குறித்து மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் கூறுகையில், கடந்த புதன்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் மலாக்கா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், அச்சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போலீசில் புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக அவரது தாய் கூறியுள்ளார்.
ஆனால், பிரேதப் பரிசோதனையில் உடலில் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நான்கு சந்தேக நபர்களும் விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று முதல் ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறார் சட்டம் 2001-ன் பிரிவு 31(1)(a)-ன் கீழ் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.








