கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கம் மற்றும் விசாரணைத் துறையின் புதிய தலைவராக உதவி ஆணையர் சுஃபியான் அப்துல்லா இன்று முதல் பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கு முன்னர் அப்பதவியை வகித்த முதிர்நிலை உதவி ஆணையர் முஹமட் ஸம்ஸுரி முஹமட் இசா, புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் பொது காவல் பிரிவுக்கான முதன்மை உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற பொறுப்புப் பரிமாற்ற நிகழ்ச்சியில், கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் முன்னிலையில் இருவரும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்புகளைப் பரிமாறிக் கொண்டனர்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள், தாம் சார்ந்த துறைக்குத் தலைமை தாங்கிய முஹமட் ஸம்ஸுரியின் சேவையைப் பாராட்டிய ஃபாடில் மார்சுஸ், புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சுஃபியான் அப்துல்லாவுக்கு அதிகாரிகளும் பணியாளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
சுஃபியானின் அனுபவமும் தலைமைத்துவமும் தலைநகரின் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் சாலைப் பாதுகாப்புப் பணிகளை மேலும் மேம்படுத்த உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.








