இன, மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கு 1948ஆம் ஆண்டு தேசநிந்தனைச் சட்டத்திற்கு மாற்றுத் தீர்வு எதுவும் தற்போது இல்லை எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சட்டம் தொடர்பாகத் தமக்கே சில தயக்கங்கள் இருந்தாலும், நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு வேறு மாற்று வழி இல்லை என்று மக்களவையில் பிரதமருக்கான கேள்வி நேரத்தின்போது அவர் இதனைக் கூறினார்.
எந்தவொரு மதத்தையும் அவமதிக்கும் செயல்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்றும், ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டுமே சட்டம் பொருந்தும் வகையில் இருந்தால் இன, மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இன, மதம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான விவகாரங்களில் விசாரணைகள் இரட்டை நிலைப்பாட்டுடன் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார். இருப்பினும், சில விசாரணைகள் நீண்டகாலம் எடுப்பதை ஒப்புக் கொண்டார்.
முன்னாள் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, சிலாங்கூர் சுல்தான் மற்றும் பன்றி வளர்ப்பு தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் குறித்த விசாரணை ஏன் தாமதமடைகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோசோல் வாஹிட் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், திரெங்கானு மாநிலத்தில் வெள்ளிக்கிழமைத் தொழுகைக்காக நண்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை கடைகளை மூடும் நடைமுறையை விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர் கூ பொயெ தியோங்கின் கருத்துக்கும் தாம் உடன்படவில்லை என அன்வார் குறிப்பிட்டார். அவர் மன்னிப்புக் கேட்டிருந்தாலும், அடுத்தகட்ட நடவடிக்கையைப் போலீசாரே தீர்மானிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.








