இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 30 நாள் விசா இல்லாத பயணச் சலுகையை ரத்து செய்யும் முடிவை, மலேசிய அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் நஸ்ரி அஸிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முடிவு மலேசியாவின் சுற்றுலாத்துறையைப் பாதிப்பதுடன், இந்தியாவுடனான நல்லுறவிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
விசா இல்லாத சலுகையைப் பயன்படுத்தி மலேசியாவில் எத்தனை இந்தியர்கள் சட்டவிரோதமாக வேலை செய்கிறார்கள்? அல்லது அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்து மலேசியாவில் தங்கியிருக்கிறார்கள்? என்பதை முதலில் அரசாங்கம் கண்டறிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடிநுழைவுத் துறைத் தகவலின்படி, ஒரு லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றால் அது கவலைக்குரிய விஷயம். ஆனால், அந்த எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், அனைத்து இந்தியப் பயணிகளுக்கும் இந்தச் சலுகையை ரத்து செய்வது நியாயமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, இந்தியர்களுக்கான 30 நாள் விசா விலக்கு வரும் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடையும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்திருந்ததற்குப் பதிலளிக்கும் வகையில் நஸ்ரி அஸிஸ் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.








