சிங்கப்பூரில் ஊழல் வழக்கில் தேடப்பட்டு வந்த 30 வயதைக் கடந்த ஆடவர் ஒருவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்துள்ளது.
கடந்த நவம்பர் 22-ஆம் தேதி இரவு 7 மணியளவில் ஜோகூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் அவர் கைது செய்யப்பட்டதாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹாலிம் அமான் தெரிவித்துள்ளார்.
மேலும், முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் சிங்கப்பூரில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், முறையான பயண ஆவணங்களின்றி மலேசியாவுக்குள் நுழைந்து தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.
அதேவேளையில் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக மலேசிய அமலாக்க அதிகாரிகளுக்குக் கையூட்டு வழங்கியதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, நேற்று ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்கண்டார் குடிநுழைவு வளாகத்தில், சிங்கப்பூரின் ஊழல் விசாரணைப் பிரிவான சிபிஐபி (CPIB) அதிகாரிகளிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டதாக அப்துல் ஹாலிம் அமான் தெரிவித்துள்ளார்.








