மலேசியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரஜைகளுக்கான 30 நாள் விசா விலக்கு சலுகை வரும் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அதனை மலேசிய அரசாங்கம் நீட்டிக்க வேண்டும் என மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கமான மாட்டா (MATTA) கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியச் சுற்றுலாப் பயணிகள் 2025ஆம் ஆண்டில் மட்டும் மலேசியப் பொருளாதாரத்திற்கு சுமார் 14.8 பில்லியன் ரிங்கிட் வருவாயைப் பெற்றுத் தந்துள்ளதாக மாட்டா தலைவர் நிஜேல் வோங் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டில் 773,221ஆக இருந்த இந்தியப் பயணிகளின் வருகை, விசா விலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டில் சுமார் 1.4 மில்லியனாகவும், 2025ஆம் ஆண்டில் 1.6 மில்லியனாகவும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விசா விலக்கு முடிவுக்கு வந்தால், இந்தியப் பயணிகளின் வருகை குறைவதுடன் விமானச் சேவைகளும் பாதிக்கப்படக்கூடும் என்றும், இதனால் சிறு வணிகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வருவாய் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
அதேவேளையில், தேசியப் பாதுகாப்பையும் எல்லைப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் இடர் அடிப்படையிலான சோதனைகளுடன் விசா விலக்கை நீட்டிக்கலாம் என்றும் மாட்டா பரிந்துரைத்துள்ளது.








