ஜோகூரில் செம்பனைத் தோட்டத்தில் அறிமுகமான ஒருவரைக் கொலை செய்த இரு ஆடவர்களின் இறுதி மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் இருவருக்கும் விதிக்கப்பட்ட 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
45 வயது எல். கோபு, 46 வயது வி. சுரேஷ் ஆகிய இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், குளுவாங்கின் லாயாங்-லாயாங் பகுதியில் உள்ள கம்போங் எஸ்சி செம்பனைத் தோட்டத்தில் 41 வயது அரிஸ் நகான் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
இவ்வழக்கில் இருவருக்கும் தலா 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன. சிறைத்தண்டனை அவர்கள் கைது செய்யப்பட்ட 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் இருந்து கணக்கிடப்படும்.
இவ்வழக்கில் விசாரணை நீதிபதி, கொலைக் குற்றச்சாட்டைக் குறைந்த குற்றமாக மாற்றியது தவறு என்றும், குற்றத்தை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இருந்ததாகவும் தலைமை நீதிபதி வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சாலே தலைமையிலான மூவர் கொண்ட நீதிபதிகள் குழு தெரிவித்தது.
மேலும், உயிரிழந்தவரின் உடலில் 42 காயங்கள் கண்டறியப்பட்டதாக உடற்கூறு ஆய்வு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.








